Thursday, April 25, 2013

சித்ரகுப்த சுவாமியின் வரலாறு

சித்ரகுப்த சுவாமியின் வரலாறு பற்றிய விபரமறிய முயற்சி செய்ததில் நான் அறிந்துகொண்ட சில தகவல்கள் இதோ உங்கள் பார்வைக்கும்.

சித்ரகுப்த சுவாமியின் வரலாறு நான்கு விதமாக கூறப்படுகிறது.
•பார்வதி அம்பாள் சித்திரம் எழுதி உயிர் கொடுத்தார். சித்திரத்தில் இருந்து உயிர் பெற்றதினால் சித்திரகுப்தா என பெயர் பெற்றார்.
•காமதேனுவின் வயிற்றில் உதித்தார் என்றும் அதனால் பசும்பால், பசும் தயிர் இவருக்கு அபிஷேகம், நைய்வேத்தியம் செய்யக்கூடாது. எருமைப்பால், எருமைத்தயிர்தான் அபிஷேகம், நைவேத்யம் செய்ய வேண்டும் என்று சிலர் கூறுவர்.
•‘சித்’ என்றால் மனம், ‘அப்தம்’ என்றால் மறைவு என்றும் பொருள். மனிதனுடைய உள்மனதில் மறைவாக இருக்கக்கூடிய எண்ணங்களின் அடிப்படையில் அவரவரின் வாழ்க்கை முறைகளை அமைத்துத்தருபவர்.
•சித்திரை மாதத்தில் பிறந்த புத்திரன் ‘சித்திரபுத்திரன்’ சித்ரகுப்தன் எனப்பட்டார்.

சித்ரகுப்தன் கதைச் சுருக்கம்:

தனியொரு நபராக கோடிக்கணக்கான மக்களின் பாவ, புண்ணியங்களை மேற்கொள்ளும் பணி கடினமாக இருக்கவே ஈசனிடம் எமதர்மன் வேண்டிக்கொள்ளும் பொருட்டு அருகில் நின்றிருந்த பிரம்மனிடம் எமதர்மனுக்கு ஒரு உதவியாளனைத் தரவேண்டியது உமது பொறுப்பு என்றார்.

இதனை எமனின் தந்தையான சூரியபகவானுக்குத்தான் அச்செயலை ஈடேறும்படி செய்ய இயலும் என அறிந்த பிரம்மா, சூரியனுக்குள் ஒரு அக்னியை தோற்றுவித்தார். மனதுக்குள் புகுந்த மாயத்தால் காதல் ஏற்பட்டது.

அதன்பொருட்டு சூரியன் வானில் சஞ்சரிக்கும்போது எதிர்பட்ட வானவில்லை ஏழு வண்ணங்களை ஒருங்கிணைத்து ஒரு பெண்ணாக உருமாற்றி அப்பெண்ணை நீனாதேவி என்று பெயரிட்டு அவளுடன் வாழ்ந்து வந்தார்.அதன் காரணமாக ஒரு சித்திரைத் திங்களில், பௌர்ணமி நாளில் பிறந்த புத்திரனுக்கு சித்திர புத்திரன் என்று பெயரிட்டனர். அக்குழந்தையின் இடக்கையில் ஏடும், வலக்கையில் எழுத்தாணியுமாக தோன்றினார். வானவில்லான அவரது தாயின் பல வண்ணங்களை உணர்த்தும் பொருட்டுதான் சித்திரகுப்தருக்கு பலவண்ண துணியைச் சாற்றுவார்கள்.

சித்ரகுப்தர் காஞ்சியில் சிவபெருமானை கடுமையாக பூஜை செய்தார். அதன் பயனாக அறிவாற்றலும் எல்லா சித்திகளும் கிடைத்தன. ஆகவே தனது சக்தியினை சோதிக்க விரும்பி படைப்புத் தொழிலை மேற்கொள்ள ஆரம்பித்தார். பிரம்மா உட்பட அனைவரும் அதிர்ந்தனர்.இதனை சூரியனிடம் தெரிவித்தனர். உடனே சூரியன் மகனிடம் மக்களின் இரவு,பகல் என்று பொழுதினைக் கணக்கிட்டு, மக்களின் வாழ்க்கையை நடைமுறைப்படுத்துபவன் நான். அதே போல் நீயும் மக்களின் கணக்கினை அதிலும் பாவ, புண்ணியத்தை கணக்கெடுப்பாயாக. படைப்புத்தொழில் உனக்கன்று. அது பிரம்மனின் தொழில் என அறிவுறுத்தினார்.

மேலும், மகனுக்கு திருமணம் செய்தால் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வருவான் என்பதனை உணர்ந்த சூரியன், சித்திரகுப்தருக்கு மனைவியாக வரவேண்டி தவம் புரிந்த கன்னியர்களான சிவாம்சத்தில் உதித்து சத்ரிய தர்மத்தை வகித்த மயப்பிரம்மனின் மகள் நீலாவதி, அந்தணர் தர்மத்தை வகித்த விஸ்வ பிரம்மாவின் மகளான கர்ணகி ஆகிய மூவருமே தன் மகனுக்கு ஏற்ற மனைவியர் என்று திருமணம் செய்வித்தார்.

சித்ரகுப்தன் பணியினை மறந்து சந்தோஷமாக குடும்பம் நடத்தியதில் கலவரம் அடைந்த எமதர்மன் நேராக தந்தை சூரியனிடம் சென்று தன் குறையை விளக்கினார். சித்ரகுப்தனின் பொறுப்புகளை விளக்கி எமதர்மனுக்கு உதவிபுரிய அனுப்பிவைத்தார். தன் மனைவியருடன் எமபுரிக்கு புறப்பட்ட சித்ரகுப்தர் அங்கே அமர்ந்து மக்களின் பாவ, புண்ணிய கணக்குகளை எந்த தவறும் வராதபடி இப்பொழுதும் கணக்கெடுத்துக் கொண்டிருக்கிறார்.

இவ்வாறு கதைசொல்வதன் முக்கிய நோக்கம் : மக்கள் பாவச்செயல் செய்யும் எண்ணத்தை விட்டு, புண்ணியச்செயலில் ஈடுபட வேண்டும் என்ற நல்ல எண்ணம் மேலோங்கவே. எனவே நல்ல எண்ணங்களோடு வாழ்ந்து நற்பலன்களை பெறுவோமாக.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...