பசும் பாலைப் போலவே தயிரையும் பசும் பாலிலிருந்துதான் பெற வேண்டும். கடையில் விற்கும் தயிர் இறை மூர்த்திகளின் அபிஷேகத்திற்கு ஏற்புடையது அல்ல. பொதுவாக, சமைத்த எந்த ஒரு பதார்த்தமும் மூன்று மணி நேரத்திற்குப் பின் தன் ஜீவ சக்தியை இழந்து விடும் என்பது பெரியோர்கள் கூற்று. இதை யாமம் கழிந்து உணவு என்றும், அத்தகைய உணவைத் தவிர்ப்பது நலம் என்று அறிவுறுத்துகின்றனர். ஆனால், இதற்கு விலக்காக இருப்பது பசும்பால், தயிர் போன்றவை. இருப்பினும், பசுந் தயிரை இறை அபிஷேகத்திற்காகப் பயன்படுத்தும்போது அதில் ஒரு குறிப்பிட்ட முறையில் தயார் செய்வது நலம்.
அதாவது, நாம் அபிஷேகம் செய்யப்போகும் மூன்று தினத்திற்கு முன்னரே பசும் பாலை வாங்கிக் காய்ச்சி அதில் தயிரைத் தோய்த்து உறை ஊற்றி வைத்து விட வேண்டும். இரண்டாம் அந்த உறை ஊற்றிய தயிரிலிருந்து ஒரு சிறு பகுதியை எடுத்து அடுத்த நாள் காய்சிய பாலில் உறை ஊற்ற வேண்டும். பின்னர் அவ்வாறு கிடைக்கும தயிரை மூன்றாம் நாள் பாலில் உறை ஊற்ற வேண்டும். இவ்வாறு மூன்று முறை உறை ஊற்றிய தயிர் மிகவும் தூய்மை உடையதாகவும், சகஸ்ர லிங்க மூர்த்திகளுக்கு ஏற்புடையதாகவும் சித்தர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
பாலைக் காய்ச்சுவதற்கும், உறை ஊற்றி வைப்பதற்கும் மண் கலயங்களைப் பயன்படுத்துவதால் அளப்பரிய பலன்களைப் பெறலாம். கிருஷ்ணர் இவ்வாறு மண் கலயங்களில் சேமித்து வைக்கப்பட்ட தயிரைத்தான் விரும்பி உண்டார் என்பது நீங்கள் அறிந்ததே. நந்த கோபர் மாளிகையில் தங்கம், வெள்ளியாலான பானைகள் இருந்தாலும் கோபிகைளின் குடிசைகளில் மண் கலயங்களில் தேய்காய் நாரில் தொங்கிய உறியில் கிடைத்த தயிர்தான் கோகுல கண்ணனுக்கு மிகவும் உவப்புடையதாக இருந்தது.
தேங்காய் உறி பல கண் திருஷ்டி தோஷங்களையும், காத்து, கருப்பு தோஷங்களையும் நீக்கும். சமுதாயத்தில் பரவியுள்ள பல ஆவி தோஷங்களைக் களைவதற்காகத்தான் இத்தகைய உறி அடித் திருவிழாக்களை மக்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள். வீட்டு வாசல்களிலும் தேங்காய் நாரினால் வேயப்பட்ட மிதி அடிகளைப் பயன்படுத்துவதால் வெளியிலிருந்து வரும் எச்சில், கழிப்பு, திருஷ்டிகழி தோஷங்களிலிருந்து நிவாரணம் பெறலாம்.
No comments:
Post a Comment