தமிழரின் புத்தாண்டு எது என்ற சர்ச்சை அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. பன்னெடுங்காலமாக தமிழர், சித்திரை முதல் நாளையே புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் நாட்டில், கடந்த தி.மு.க அரசினால் தை முதனாளே வருடப்பிறப்பு என அறிவிக்கப்பட்டபோதும், தற்போதைய அ.தி.மு.க அரசால், சித்திரையே புத்தாண்டு என மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் தமிழக அரசின் உபயத்தில், மலேசியாவில் நெடுநாளாக தையே புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டு வருவதாகவும் புலம்பெயர் தமிழர் வாழும் பல நாடுகளிலும், தைப்பொங்கலன்றே புத்தாண்டு கொண்டாடப்பட்டு விட்டதாகவும் அறியமுடிகிறது.
இதற்கு, நாம் முதலில் தைப்புத்தாண்டின் பின்னணியை ஆராய்வது தகும்.
சித்திரைக்கு ஆரியப்புத்தாண்டு என்று பெயர்சூட்டி, தை மாதத்தில் ஆரம்பிக்கும் திருவள்ளுவர் ஆண்டை, தமிழர் புத்தாண்டு என அறிமுகம் செய்தது 1971ல் ஆட்சியிலிருந்த தி.மு.க அரசு. (கிறிஸ்து ஆண்டு + 31 = திருவள்ளுவராண்டு)
இம்மாற்றத்துக்கான காரணங்களாக அவ்வரசு கூறிய காரணங்கள் என்னென்னெ; அவையெல்லாம் சரிதானா?? ஆராய்வோம்:
1.1921இல், சென்னை பச்சையப்பா கல்லூரியில், மறைமலையடிகள் தலைமையில், 500இற்கும் மேற்பட்ட அறிஞர்கள் கூடி எடுத்த முடிவு தான் தைப்புத்தாண்டு!
இது, அப்பட்டமான பொய்யென்று சொல்கிறது, 15.05.1955இல் தமிழ் மறைக்கழகத்தால் வெளியிடப்பட்ட, “திருவள்ளுவர் திருநாள் மலர்” எனும் வெளியீடு.
திருவள்ளுவரின் காலம் கிறிஸ்து காலம் + 31 என மறைமலையடிகள் கணித்தது உண்மைதான். எனினும் தைப்புத்தாண்டு பற்றியோ, திருவள்ளுவர் தினம் தை 1 என்றோ அவர் என்றுமே சொன்னதில்லை. வைகாசி அனுச நட்சத்திரமே திருவள்ளுவர் தினமெனக் கொண்டாடப்பட்டு வந்துள்ளதென்பதற்கு மேற்காட்டிய திருவள்ளுவர் தின மலரே ஆதாரம்!
சென்னையில் திருவள்ளுவர் திருநாள் கழகத்தால் 1935ஆம் ஆண்டு மே மாதம்; 18 மற்றும் 19-ஆம் திகதிகளில், பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் திருவள்ளுவர் திருநாள் கொண்டாடப்பட்டது பற்றியும், தமிழகம் மட்டுமல்லாமல், இலங்கை, பர்மா மற்றும் பிற இந்திய மாநிலங்களிலும் வைகாசி அனுடம் (அனுசம்) திருவள்ளுவர் தினமாக 1935-இல் கொண்டாடப்பட்டதையும், எந்தெந்த அறிஞர்கள் கொண்டாடினார்கள் என்பதையும் திருவள்ளுவர் திருநாள் மலர் பக்கம் கஉஅ(128) - கங0 (130) இல் காணலாம்.
1935-இல், உலகெங்கும் திருவள்ளுவர் தினமாக வைகாசி அனுடம் கொண்டாடப்பட்டதையும், எந்தெந்த அறிஞர்கள் கொண்டாடினார்கள் என்பதையும் திருவள்ளுவர் திருநாள் மலர் பக்கம் .௧௨௮(128) – ௧௩௦ (130) இல் காணலாம். 15.5.1955-இல் தமிழ்மறைக் கழகம், தமிழினத்தை ஒன்று படுத்தும் திருநாள், திருவள்ளுவர் திருநாள். அது வைகாசி அனுடம் என்று திருவள்ளுவர் திருநாள் மலர் வெளியிட்டிருக்கிறது. இதில் ‘தை’யை வள்ளுவர் தினம் என்று சொன்ன கி.ஆ.பெ.விஸ்வநாதம் அவர்களைக் கடுமையாகக் கண்டித்துள்ளார் திரு கா.போ.ரத்னம் அவர்கள். வைகாசி அனுடம் தான் திருவள்ளுவர் தினம் என்று உறுதி செய்த தமிழ் அறிஞர் பட்டியல் இம் மலரில் வெளியிடப்பட்டுள்ளது. http://www.tamilhindu.com/
இங்கு 1921ஆம் ஆண்டு எங்கே வந்தது? அறிஞர்கள் எப்போது கூடினார்கள்? எப்போது முடிவெடுத்தார்கள்? ஒரு தகவலுமே இல்லையே?
அரசு சாட்டுக் கூறிய 1921இற்கும், தை புத்தாண்டாக அறிவிக்கப்பட்ட 1971இற்கும் இடையில் 50 வருட வித்தியாசம்…. மறைமலையடிகள் உட்பட அந்தக் காலத்தில் இருந்த யாருமே உயிரோடு இருக்கவில்லை என்ற தைரியத்தில், அரசு செய்த மாற்றம் தான் இது…!!!
வைகாசி அனுசத்தில் கொண்டாடப்பட்டு வந்த திருவள்ளுவர் தினம், அறிஞர்களின் கோரிக்கைக்கேற்ப, 1966-ஆம் ஆண்டு முதல், சூன் 2ஆம் திகதி, ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினமாகக் கொண்டாட விடுமுறை அளிக்கப்பட்டது. எனினும், 1970இல் ஏற்பட்ட திமு.க ஆட்சிமாற்றத்தை அடுத்து, தை முதலாந் திகதிக்கு, மாற்றப்பட்டது என்பது வரலாறு.
ஆக, திருவள்ளுவர் ஆண்டு, தைப்புத்தாண்டு எல்லாமே தமிழறிஞர்களின் முடிவன்று; தனி ஒரு மனிதரின் முடிவு என்பது இவற்றின் மூலம் தெளிவாகிறது. வீணே மறைமலையடிகளையும், தமிழறிஞர்களையும் வம்புக்கு இழுத்ததுதான் மிச்சம்!
தமிழக அரசையே உலகத்தமிழரின் தலைமை அமைப்பாகக் எண்ணிக்கொண்டிருக்கும் தமிழறிஞர் பலரும் இது யாவற்றையும் உண்மை என்று நம்பியதே இன்னும் வேதனைக்குரிய விடயம்.
2.“தைஇத் திங்கள்”, “தைஇய திங்கள்” முதலான தை மாதம் பற்றிய தகவல்கள், நற்றிணை, புறநானூறு, முதலான சங்க இலக்கியங்களில் உள்ளதால், தையே சங்ககாலத்தில் புத்தாண்டாக இருந்திருக்கிறது. எனவே, தையே புத்தாண்டு!
“தைஇத்திங்கள்”, முதலான் சங்க இலக்கியச் சொற்கள், தை புத்தாண்டு என்றா சொல்கின்றன?
நிச்சயம் இல்லை...ஏன்?
மேற்காட்டியுள்ள உதாரணங்கள் குறிப்பது தைப்புத்தாண்டை அல்ல , சங்ககாலத்தில் தைமாதத்தில் இடம்பெற்ற, “தைநீராடல்” எனும்; நீராடல் விழாவை!
தைநீராடிய தவத்தின் பயனாகச் பெண்களின் விருப்பங்கள் நிறைவேறி, செல்வ வளம் பெருகிக் குடும்ப நலன் சிறப்புறும் என்ற நம்பிக்கை காணப்பட்டதை சங்க இலக்கிய வரிகள் மூலம் அறியமுடிகிறது:
“தைஇத் திங்கள் தண்கயம் போலக்
கொளக்கொளக் குறையாக் கூழுடை வியனகர்.” -புறநானூறு. 70:6-7
“தைஇத் திங்கள் தண்கயம் படியும்
பெருந்தோட் குறுமகள்” - நற்றிணை 80
“நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும்
தைஇத் தண்கயம்” - ஐங்குறுநூறு 84
“வையெயிற்றவர் நாப்பண் வகையணிப் பொலிந்து நீ
தையில் நீராடிய தவந்தலைப் படுவையோ” - கலித்தொகை 59:12-13
(தண்கயம் = குளிர்ந்த நீர்நிலை)
இவ்வரிகள் எல்லாவற்றையும் கூர்ந்து அவதானியுங்கள். இவற்றில் எந்த வரியிலாவது தைநீராடலானது, சூரியவழிபாட்டுடன் தொடர்பானது, அல்லது புத்தாண்டுக்குரிய ஆரம்பம் என்பது பற்றி ஒரு சொல்லாவது காணப்படுகின்றதா?
தைநீராடல் பற்றி, பரிபாடல் மிக விரிவாகக் கூறியுள்ளது. பரிபாடல் தரும் விவரங்களைத் தொகுத்துப் பார்த்தால், இந்நோன்பு மார்கழி ஆதிரையன்று தொடங்கி 29 நாள்கள் நடைபெற்று 30ஆவது நாளில் வருகின்ற தைப்பூச நாள் நீராடலுடன் முடிவுற்றிருக்க வேண்டும் எனத் தெரியவருகிறது.
“கனைக்கும் அதிர்குரல் கார்வானம் நீங்கப்
பனிப்படு பைதல் விதலைப் பருவத்து
ஞாயிறு காயா நளிமாரிப் பின்குளத்து
மாயிருந் திங்கள் மறுநிறை ஆதிரை” -பரிபாடல் 11
காலவெள்ளத்தில் அடிபட்டு, சில பண்டிகைகள், நோன்புகள் தம் சுயத்தை இழந்து திரிபதுண்டு. தைநீராடலுக்கும் அதுதான் நிகழ்ந்தது. சங்க காலத்து (கி.மு 3 - கி.பி 3 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையே) தைநீராடல், மணிவாசகர் மற்றும் ஆண்டாள் காலத்தில் (கி.பி 4 - 8 ஆம் நூற்றாண்டுக்கு இடையில்) மார்கழி மாதத்தில் மகளிர் நீராடிக் கொண்டாடும் பாவைநோன்பாக மாறிவிட்டது.
ஆனாலும், தைப்பூசத்தில் முடிந்த தைநீராடலின் எச்சமாக, தைப்பூசம், நெடுங்காலமாக, மகளிர் கொண்டாடும் விழாவாகவே இருந்து வந்ததை,
“நெய்ப்பூசும் ஒண் புழுக்கல் நேரிழையார் கொண்டாடும்
தைப் பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்”
என்ற சம்பந்தர் தேவாரம் (கி.பி 7ஆம் நூற்றாண்டு) மூலம் அறியமுடியும்.
தைநீராடல் - அதுவும் பெண்கள் மட்டும் நோற்ற தைநீராடல் நோன்பு தான் புத்தாண்டாகக் கொண்டாடப்பட்டது என்று எப்படி சொல்லமுடியும்?
3.பெண்ணுருவெடுத்த நாரதருக்கும், கண்ணனுக்கும் பிறந்த 60 குழந்தைகள் தான் பிரபவ முதலான 60 வருடங்கள் என்று “அபிதான சிந்தாமணி” எனும் நூல் சொல்கிறது. இந்த அசிங்கமான ஆரியக்கதையையும் வடமொழி வருடப் பெயர்களையும் தமிழன் பின்பற்றுவதே அசிங்கம்!
உண்மைதான், ஒரு தமிழனாக நோக்கும்போது, 60 வருடங்களுக்கும் வடமொழிப்பெயர் இருப்பதும், அதற்காக சொல்லப்படும் புராணக் கதையும் ஏற்றுக்கொள்ளமுடியாததாக இருக்கிறது - உண்மை! ஆனால், இந்தக் கதைக்காக யாரும் புத்தாண்டு கொண்டாடுவதில்லையே!
இந்த வடமொழி வருடக் கணக்கைத் தான் பலநூறு வருடங்களாக தமிழர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவின் வேறெந்த இனத்தவரிடையேயும், வேறெந்த மாநிலத்திலும் இப்பெயர் வழக்கத்திலில்லை என்பதும் தமிழர்களால் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்பதும் இங்கு ஊன்றி நோக்கத் தக்கது.
சரி, தமிழர் மண்ணில் இனியும் வடமொழி வேண்டாமென்றால், அவற்றைத் தமிழ்ப்படுத்திப் பயன்படுத்தலாம். (ஒரு ஒளிப்படத்தில் “விரோதி வருடம்” (2009ஃ2010) அழகுதமிழில் “தீர்பகை ஆண்டு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது; என்ன அழகான பெயர்!) இல்லாவிட்டால், அறுபது வருடக் கணக்கே வேண்டாமென்றும் விட்டு விடலாம். ஆனால் அதற்காக, காலம்காலமாக தமிழர்கள் கொண்டாடிய சித்திரைப்புத்தாண்டையே கைவிடவேண்டும் என்பது சுத்த முட்டாள்த்தனமாகத் தென்படவில்லை?
4.தமிழர் புத்தாண்டு எல்லா மதத்தவரும் கொண்டாடுவதாக இருக்கவேண்டும். சனாதன நெறியாளர்கள் மட்டும் கொண்டாடும் ஒரு பண்டிகையாக இருக்கக் கூடாது! மதம்சார்ந்த சித்திரைப்புத்தாண்டை நாங்கள் எதிர்க்கவில்லை; அதை சனாதனர்கள் கொண்டாடி விட்டுப்போகட்டும்; ஆனால், தமிழர்கள் எல்லோரும் தைப்புத்தாண்டைக் கொண்டாட வேண்டும்!
(“ஹிந்து” என்ற பதம் தற்போது பல்வேறு வாதப்பிரதிவாதங்களுக்கு உள்ளாகி வருவதால், அதற்கு மாற்றாக “சனாதன நெறி” என்ற பதம் இக்கட்டுரை முழுவதும் எடுத்தாளப்படுகிறது.)
தமிழ்ப்புத்தாண்டு மதம் சார்ந்த புத்தாண்டா?
நிச்சயமாக இல்லை! சித்திரைப்புதுவருடம், சனாதனர்கள் (இந்துக்கள்) மட்டும் கொண்டாடும் பண்டிகை அல்லவென்பதை, இத்தகையவர்கள் முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.. தமிழ்ச் சனாதனர்களால் மட்டுமன்றி, தமிழகத்தில் சிறுபான்மையாகவுள்ள தமிழ்ப்பௌத்தர்கள், தமிழ்ச்சமணர்களாலும் இப்புதுவருடம் கொண்டாடப்படுகிறது. அவர்களும் சேர்ந்து கொண்டாடுவதால், கண்ணன் - நாரதர் கதையை பௌத்த சமணர்களும் ஏற்றுக்கொண்டதாக அர்த்தமா, என்ன?
தமிழரின் புத்தாண்டு, வேனிற்காலத்தை வரவேற்கும் விழா! அவ்வளவுதான்! இதில், கண்ணனுக்கோ நாரதருக்கோ சம்பந்தமில்லை!! தமிழ் பேசும் கிறித்தவ - முசுலீம் சகோதரர்கள் தாராளமாக சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டைக் கொண்டாடலாம்! யாரும் அதற்கு தடை சொல்லப் போவதில்லை!
தையைப் புத்தாண்டு ஆக்குவதற்காக, சித்திரைக்கு மதச்சாயம் பூசியது யாரென்று தான், உலகத்துக்கே தெரியுமே! மதம்சார்ந்த சித்திரைப்புத்தாண்டை அவர்கள் எதிர்க்கவில்லையாம் – விட்டுக்கொடுக்கிறார்களாம்...தம
ஏற்கனவே தமிழன் வெட்கமின்றி, இரண்டு புத்தாண்டுகளைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான். இந்நிலையில், மதப்புத்தாண்டு மொழிப்புத்தாண்டு என்றுவேறு பிரித்து மூன்று புத்தாண்டா?? உருப்பட்டாற் போல்தான்!
இவ்வெல்லா ஆதாரங்களையும் உற்றுநோக்கும்போது, தைப்புத்தாண்டு, தமிழறிஞரால் முடிவு செய்யப்பட்டது; சங்ககாலத்திலிருந்தே கொண்டாடப்பட்டுவந்தது போன்ற வாதங்கள் முற்றாகப் பொய்யானவை என்ற முடிவுக்கே வரமுடிகிறதல்லவா?
சரி, சித்திரை தான் தமிழர் புத்தாண்டு என்பதற்கு என்ன ஆதாரம்??
உண்மையில், தையோ சித்திரையோ, சங்ககாலத்தில் புத்தாண்டு என்று ஒரு பண்டிகை கொண்டாடப்பட்டதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை! ஆனால், சிறுபொழுது, பெரும்பொழுது எனக் காலத்தைக் கணித்த முன்னோர்கள், குறிப்பிட்ட மாதத்திலிருந்து தான், 12 மாதக் கணக்கைக் ஆரம்பித்திருப்பர் என்பதில் சந்தேகம் இல்லை! அம்மாதம் எது?
“திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக
விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலம்” -நெடுநல்வாடை. வரி 160 -161
இதன் பொருளை சுருக்கமாகப் பார்த்தால், “வலிமையான கொம்பை உடைய ஆடு (மேடம்) முதலான உடுத்தொகுதிகளின் ஊடாகச் சூரியன் இயங்கும் வான் மண்டலம்” என்பதாகும்.
சூரியன் மேட இராசியில் நிற்கும் மாதம் சித்திரை என்பது யாவரும் ஏற்றுக் கொண்ட ஒன்று தான்! 12 தமிழ் மாதங்களும் சௌரமானத்தில் (சூரியன் சார்ந்து) குறிப்பிடப்படும்போது, மேழம்(மேடம் - சித்திரை), விடை(இடபம் - வைகாசி), ஆடவை(மிதுனம் - ஆனி) என்று 12 தமிழ் இராசிப் பெயர்களிலேயே குறிப்பிடப்படுகின்றன.
சித்திரையே தமிழரின் முதல் மாதம் எனும் நெடுநல்வாடையின் இந்த ஆதாரத்துக்கு பதில் என்ன?? நெடுநல்வாடை பார்ப்பனரால் பாடப்பட்டது - இதுவும் ஒரு ஆரியச் சதி என்று வழக்கமான பல்லவியைப் பாடப்போகிறார்களா??
சங்ககாலத்தில், சித்திரையே முதல்மாதமாகக் கணிக்கப்பட்டது என்பதற்கு நெடுநல்வாடையின் சான்று காட்டியாயிற்று. ஆனால், தை, சித்திரை மாதங்கள் தவிர, இன்னொரு மாதமும் புத்தாண்டு விவாதத்தில் கலந்துகொள்கிறது….
அது ஆவணி!
பழந்தமிழர் ஒரு வருடத்தை ஆறு பருவங்களாகப் பிரித்து வைத்திருந்தனர். கார்காலம்(ஆவணி, புரட்டாதி), கூதிர்காலம்(ஐப்பசி,கார்த்திகை)
சோழப்பேரரசு காலத்தில் (கி.பி 10ஆம் 11ஆம் நூற்றாண்டுகள்) குறிப்பிட்ட காலத்துக்கு அல்லது, குறிப்பிட்ட சமூகத்தினருக்கு ஆவணியே முதல் தமிழ் மாதமாக இருந்தது என்பதற்கு இலக்கிய ஆதாரங்கள் உண்டு. சோழப்பேரரசு காலத்தில் உருவானவை எனக் கருதப்படும் நிகண்டுகளில் இதற்கான சான்றுகள் உண்டு.
“மருவும் ஆவணியே ஆதி மற்றிரண் டிரண்டு மாதம்
பருவம் மூவிரண்டும் ஆய்ந்து பார்த்திடின் வாய்த்த பேராம்” -சூடாமணி நிகண்டு,
“ஆவணி முதலா இரண்டி ரண்டாக
மேவின திங்கள் எண்ணினர் கொளலே” - திவாகர நிகண்டு
ஆனால், நீண்ட நாள் கொண்டாடப்பட்டு வந்த வழக்கத்தில் தானோ என்னவோ சித்திரைப் புத்தாண்டே நிலைத்து விட்டது… ஆவணிப் புத்தாண்டு பிரபலமடையவில்லை.
தெளிவான சான்றுகளின் அடிப்படையில் முதல் மாதம் சித்திரையா அல்லது ஆவணியா என்ற வாதம் ஏற்பட்டிருக்கவேண்டுமே தவிர இங்கு தை எங்கிருந்து வந்தது?
இன்னும் அகத்தியர் பன்னீராயிரம், இடைக்காடர் பாடல்கள் முதலான சித்தர் இலக்கியங்கள், கமலை ஞானப்பிரகாசரின் “புட்பவிதி” எனும் நூல், இன்னுஞ் சில கல்வெட்டுச் சாசனங்கள் முதலானவையெல்லாம், சித்திரையே புத்தாண்டு என்பதற்கான ஆதாரத்தை ஐயம் திரிபற சுமந்து நிற்கின்றன.
சித்திரை வருடப்பிறப்பின் புராணக் கதையும், அறுபது வடமொழிப் பெயர்களும் தானே பிரச்சனை? அவற்றைத் தூக்கியெறிந்து விட்டு திருவள்ளுவராண்டின் தொடக்கமாக சித்திரை முதல் நாளைக் கொண்டால்தானென்ன?
60 வருடங்களுக்கும் புதிய தமிழ்ப்பெயர்களை சூட்டலாம், இல்லாவிடின் அறுபது வருடக்கணக்கே வேண்டாம் எனலாம். ஆனால், இவற்றை ஆராயாமல், எந்த அடிப்படையுமே இல்லாமல் தையை மட்டும் தலையில் தூக்கி வைத்து ஆடுவது சரிதானா?
தைப்பொங்கல் தமிழர் திருநாள்; எனவே அது மட்டுமே புத்தாண்டாக இருக்கத் தகுதி படைத்தது என்றும் சிலர் சொல்கின்றனர். உண்மையில் தைப்பொங்கல், தமிழர் மட்டும் கொண்டாடும் பண்டிகையா என்ன?
தெலுங்கர், கன்னடர் - மகர் சங்கிராந்தி
குஜராத்தில் - உத்தராயண்
ஒரிசாவில் - மகர் மேளா
பஞ்சாப், சம்மு, உத்தரப்பிரதேசம் - லோக்ரி பண்டிகை
வங்காளம் - கங்கா சாகர் மேளா
என்று இந்தியாவெங்கும் கொண்டாடப்படும் பண்டிகைகள் எல்லாம் தமிழ் தைப்பொங்கலன்று அல்லது அதைத் தழுவிய நாட்களிலன்றோ (சனவரி 13 அல்லது 14 அல்லது 15) இடம்பெறுகின்றன? இப்படி எத்தனையோ இனத்தவர் சேர்ந்து கொண்டாடும் பண்டிகையைத் தானே இன்று தமிழர் திருநாள் என்கிறோம்!!
தமிழர் மட்டும் கொண்டாடும் பண்டிகை என்றால் கார்த்திகை தீபத்தை ஒருவேளை சொல்லலாம்… (வேண்டாம் வேண்டாம்..பிறகு கார்த்திகைப் புத்தாண்டு கொண்டாடவும் சிலர் ஆயத்தமாவார்கள்…..)
சனவரி மாத முதலாந் தேதி, ஆங்கிலப் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. இன்றும் கிறித்தவ சகோதரர்கள், சனவரி, பெப்பிரவரி, மார்ச்சு போன்ற ஆங்கில மாதப்பெயர்களுக்கு, தை, மாசி, பங்குனி என்ற தமிழ்மாதப் பெயர்களையே பயன்படுத்துகின்றனர். உண்மையில் தமிழ் மாதங்களுக்கும் ஆங்கில மாதங்களுக்குமிடையில் சுமார் 15 நாட்கள் வித்தியாசமுண்டு!
ஆங்கில மாதங்கள், தமிழ் மாதங்களாகக் காட்டப்பட்ட மாயையில் சிக்கித் தான், ஆங்கிலேயன் கொண்டாடும் சனவரி மாதத்திலேயே தன் புத்தாண்டும் கொண்டாடப்படவேண்டும் என்று விழைந்தானோ “டமிலன்”?
மாறி மாறி ஏற்படும் ஆட்சிமாற்றத்தால், தமிழக மக்கள் புத்தாண்டு விடயத்தில் குழம்புவது போல், ஈழத்தவர்கள் குழப்பமடையவில்லை என்பதில், ஒரு ஈழத்தமிழன் என்ற ரீதியில் பெருமை அடைகிறேன்
கி.பி 1624இல் திருகோணமலை திருக்கோணேச்சரப் பெருமான், சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு, நகர்வலம் சென்றிருந்தபோதுதான் போர்த்துக்கேயரால் அத்தலம் இடிக்கப்பட்டது என்பது இலங்கை வரலாறு சொல்லும் உண்மை. இச்சான்று மூலம் குறைந்தபட்சம் சுமார் 400 ஆண்டுகளாகவேனும், ஈழத்தில் சித்திரைப் புத்தாண்டு வழக்கத்தில் இருந்து வருகிறது என உறுதிபடக் கூறலாம்.
அத்தகைய ஒரு பண்டிகையை ஆரியச்சாயம் பூசி ஒழிக்க எண்ணுவது, அவ்வளவு பொருத்தமானதாகத் தெரியவில்லை.
சுருக்கமாகச் சொன்னால்…
» தை புத்தாண்டு என்பதற்கு எந்த விதமான இலக்கிய சான்றுகளும் இல்லை. அவர்கள், ஆதாரத்துக்கு இழுக்கும் மறைமலையடிகளாலும் தமிழறிஞராலும் கூட, தைப்புத்தாண்டு, என்றுமே முன்மொழியப்படவில்லை.
» தையே புத்தாண்டு என்பதற்கு அவர்கள் முன்வைக்கும் “தைஇத்திங்கள்”, “தைஇய திங்கள்”, “தைநீராடல்” என்ற பதங்கள், வெறுமனே தைமாதத்தைக் குறிப்பிடுகிறதே அன்றி, தை தான் தமிழரது புத்தாண்டு என்று பூடகமாகவேனும் குறிப்பிடவில்லை.
» தை முதனாள் வருடப்பிறப்பானதில், முழுக்க முழுக்க திராவிட வெறியையும் சனாதன நெறி எதிர்ப்பையும் தான் காணமுடிகிறது. தவிர, இது உண்மையான பகுத்தறிவுடன் முடிவு செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.
» சித்திரை, ஆவணி என்பன முதல்மாதங்களாகக் கருதப்பட்டன என்பதற்கு இலக்கியச் சான்றுகள் உண்டு. ஆனால், ஆவணி தவிர்க்கப்பட்டு, இலக்கியச் சான்றே இல்லாத தை, இந்தப் பந்தயத்தில் கலந்துகொண்ட மர்மம் யாருக்கும் புரியவில்லை.
ஆக, தமிழ்ப்புத்தாண்டு சித்திரையே என்பது வெள்ளிடைமலையாகிறது.
தமிழர் புத்தாண்டுக்கு தெளிவு கண்ட இவ்விடத்தில், உலகெங்கிலும் வாழ் தமிழறிஞர் பெருமக்களிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகிறேன்.
தமிழ்ப்புத்தாண்டு தமிழருக்குரியது. வடமொழி 60 பெயர்களையும் தமிழ்ப்படுத்தி பயன்படுத்தலாம். அல்லது, வடமொழி 60 பெயர் வழக்கைத் தவிர்த்து, திருவள்ளுவர் ஆண்டுக்கணக்கை ஏற்றுக் கொள்ளலாம் - ஆனால், அது சித்திரை 1இல் துவங்குவதாக இருக்கவேண்டும்.
(திருவள்ளுவரின் காலம் கி.மு அல்ல, கி.பி என்ற வாதம் உள்ளமையும் இங்கு நோக்கத் தக்கது.)
இவற்றில் எதை ஏற்றுக் கொள்ளலாம் - எதைத் தவிர்க்கலாம் என்பதை தமிழறிஞர்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவேண்டும்.
இத்தனை ஆதாரங்களும் போதுமென்றே நினைக்கிறேன்… மேலதிக விளக்கங்களுக்கு இவ்விணைப்புகளுக்கு சென்று பாருங்கள்.
http://www.sishri.org/
http://www.lankaweb.com/news/
http://www.mayyam.com/talk/
http://www.tamilhindu.com/
http://www.tamilhindu.com/
இத்தனை ஆதாரங்கள் காட்டப்பட்ட பின்பும், தமிழறிஞர்கள், இனியும் தைப்புத்தாண்டுக்கு ஆதரவு கொடுக்கவேண்டுமா என்பதை அவர்களே முடிவு செய்துகொள்ளட்டும்;! தைப்புத்தாண்டை தூக்கிவைத்து ஆடுபவர்கள் ஆடட்டும்… நம்மைப் பொறுத்தவரை, தைத்திருநாள் என்றென்றும் தைப்பொங்கல் திருநாள் தான்… புதுவருடம் அதே சித்திரை முதனாள் தான்!!! மாற்றமில்லை…மாற்றவும் தேவையில்லை!
மாற்ற நினைப்பவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். மக்களிடையே பாவனைக்கு விடும் எதுவும், அவர்களால் இலகுவாக ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கவேண்டும். வற்புறுத்தியோ அழுத்தம் கொடுத்தோ, புழக்கத்திலிருப்பதை மாற்றியோ அவர்களாக திணிக்கும் எதுவும் மக்கள் மத்தியில் நீண்ட நாள் நிலைக்காது. தற்போது தைப்புத்தாண்டுக்கும் அதுதான் நிகழ்ந்து வருகிறது, இன்றும் பெருமளவு தமிழர்கள் தை முதனாளை தைப்பொங்கலாகவும், சித்திரை முதனாளையே வருடப் பிறப்பாகவும் கொண்டாடுவதை, கண்கூடாகப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்!!
பார்க்கலாம்… இன்னும் எத்தனை வருடங்களுக்குத் தான் தைப்புத்தாண்டு ஓலம் கேட்கிறது என்று…!
No comments:
Post a Comment